Monday, June 3, 2013

ஒரு துளி நம்பிக்கை

தினமும் செய்திதாள்களில்  வரும் செய்திகளில் ஒன்றாக தான் ஆரம்பத்தில் டெல்லியில் நடந்த கொடூர சம்பவத்தை படித்தேன். இது மாதிரி  செய்திகளுக்கு இந்திய செய்தி தாள்களில் பஞ்சமா என்ன? உச்சு கொட்டிவிட்டு பிற வேலைகளில் மீண்டும் ஆழ்ந்து விட்டேன். ஆனால் தொலைக்காட்சி செய்திகளும், பிற ஊடகங்களும் டெல்லி மக்களின் கோபமும் அந்த சம்பவத்தை பரபரபாக்கி கொண்டிருந்தன.

இரண்டு  நாட்கள்  கழித்து மாலை வேலை முடிந்து வீடு திரும்பிய போது, தலையை  கவிழ்த்து கொண்டு உட்கார்ந்திருந்தான் என் மகன். மருத்துவ கல்லூரியில் படிக்கிறான், குளிர் கால விடுமுறையை என்னோடு கழிக்க வந்திருந்தான்.

 "உடம்பு ஏதும் சரியிலையா? தலை வலிக்கிறதா ?" என்று கவலையுடன் கேட்டேன்.

"தாங்க முடியவில்லை அம்மா...." என்றான் அவன். அவன் குரல் மிகவும் சோர்வாக இருந்தது.

பதறி போய், "என்னடா கண்ணா ஆயிற்று?" என்று கேட்டேன். 

அமைதியாக மடி கணினியை திறந்து ஏதோ ஒரு வலைத்தளத்தில் டெல்லி  மாணவிக்கு ஏற்பட்ட கொடூரத்தை விரிவாக விளக்கி இருந்த பக்கத்தை காட்டினான். படித்தவுடன் எனக்குமே தாங்கவில்லை. அதிர்ந்து போனேன். தலையில் சம்மட்டியால் ஓங்கி அடித்தது போன்று இருந்தது அதன் வீரியம்.

"இப்படி கூட மனிதர்களில் மிருகத்தனம் இருக்குமா, அம்மா?", என்று கேட்டான்.

"இந்த பெண் கண்டிப்பாக பிழைக்க மாட்டாள் அம்மா.....எனக்கு தெரியும்".  என்றான்.  உடல் கூறுகளை பற்றி பயின்று இருந்ததாலோ என்னவோ உறுதியாக சொன்னான்.

அதன் பின் ஏதோ பத்தோடு பதினொன்று என்று நினைத்து அந்த செய்தியை  விட முடியவில்லை. தினமும் இருவரும் அந்த செய்தியின் தொடர்ச்சியை படிப்பதும், விவாதிப்பதும், கோப படுவதுமாக இருந்தோம்.

 மனதில் ஏதோ ஒரு விதமான அமைதி இன்மை. புத்தாண்டை கொண்டாடும் மனநிலை இல்லை. அந்த பெண் இறந்த செய்தி எங்கள் இருவரையும் துக்கத்தில் ஆழ்த்தி இருந்தது.

நான்  வேலை செய்வது ஐரோப்பியர் அதிகம் வேலை செய்யும் ஒரு உலகளாவிய எண்ணெய் நிறுவனம்.  தினமும் காலையில் வேலையை ஆரம்பிக்கும் முன்னர் எல்லோரும்  காபி குடிக்க ஒன்றாக கூடுவது வழக்கம். பரஸ்பரம் காலை வணக்கம் பரிமாறி கொள்வதும், சூடான செய்திகளை  விவாதிப்பதுமாக கலகலப்பாக தொடங்கும் எங்கள் காலை. கேலிக்கும் கிண்டலுக்கும் கூட குறைவு இருக்காது. அன்று வருட கடைசி என்பதால் நிறைய பேர் விடுப்பில் இருந்தனர், வழக்கமாக கூடுவதை விட குறைவான ஆட்களே கூடி இருந்தனர். 

டெல்லி சம்பவமும் அந்த பெண்ணின் மரணமும் தான் அன்றைய விவாதம் என்று எனக்கு புரிய வெகு நேரம் ஆகவில்லை. வெளிநாட்டு ஊடக வட்டாரத்திலும் இந்த சம்பவம் பரபரப்பு அடைந்து விட்டதால், அலுவலகத்தில் கூட வேலை செய்யும் வெளிநாட்டவர்க்கு எல்லா விவரங்களும் தெரிந்து இருந்தன. நான் வருவதற்கென்றே காத்து இருந்தார் போல் எல்லோரும் கேள்வி கணையால் என்னை துளைக்க ஆரம்பித்தனர்.  

"இரவு ஒன்பது மணிக்கு கூட பெண்களால் இந்தியாவில் வெளியே போக முடியாதா? அவ்வளவு  பாதுகாப்பின்மையா?"

 "அட.. கூட ஒரு ஆண் இருந்தும் கூட இந்த நிலமையா?"

"யார் வேண்டுமானாலும் குடி போதையில் வண்டி ஓட்டுவது இந்தியாவில் சர்வ சாதாரணமாக நடக்குமாமே?

"இந்தியாவில் பெண்ணை தெய்வம் என்பது எல்லாம் சும்மாவா?"

"நாட்டின் தலை நகரத்தில் இந்த கொடுமை என்றால், மற்ற சிற்றூர்களில் என்னவெல்லாம் நடக்குமோ .."

"டெல்லி  முதல் அமைச்சர் கூட பெண்ணாம்..அப்படி இருந்தும் ..இந்த மாதிரி நிறைய சம்பவங்கள் நடக்கிறதாமே...ஏன் இப்படி.?

"மேற்கத்திய கலாச்சாரத்தை குறை சொல்லுகிறார்கள்..ஆனால் எங்கள் நாடுகளில் இந்த மாதிரி நடப்பது கிடையாதே ...."

 "தங்கள் கலாசாரம் சிறந்தது என்று சொல்லுவார்கள் இந்தியர்கள்  ...ஆனால் உண்மை நிலை இப்படி  உள்ளது  ..?"

நான் என்னால் முடிந்தவரை பதில் சொன்னேன்.  இருந்தாலும் அவர்கள் கேட்கும் எல்லா கேள்விக்கும்  என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ரொம்பவே அவமானமாக இருந்தது. வேறு இந்தியர் யாரும் உதவிக்கும்  இல்லை. என் நிலைமையை பார்த்து  பரிதாப பட்ட ஒரு இங்கிலாந்து நாட்டு நண்பர் என் துணைக்கு வந்தார். 

"இந்தியா ஒரு மிக பெரிய நாடு. பெரும் மக்கள் தொகை கொண்டது. நம் நாடுகளோடு இந்தியாவை ஒப்பிட்டு பார்க்க முடியாது. பலவிதமான பிரச்சினைகளில் இருந்து அந்த மக்கள் மீண்டு வர முயற்சி செய்து கொண்டு முன்னேற துடிக்கிறார்கள் ...இந்திய அரசாங்கத்திற்கு அந்த பெரும் மக்கள் தொகையை சமாளிப்பதும், அவர்களுக்கான அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்வதுமே பெரிய சவாலாக இருக்கிறது." என்று ஆரம்பித்தார்.  
 
தங்களுக்குள் ஒருவர் இந்தியாவின் சார்பாக பேச தொடங்கியதும்  எல்லாரும் அவரை கவனிக்க  ஆரம்பித்தார்கள். அவர் தொடந்தார்.

"இந்தியவின் பெரும் மக்கட் தொகையுடன் ஒப்பிட்டு பார்க்கையில் இந்த மாதிரி சம்பவங்களின் விகிதம் மிக மிக குறைவு.  இந்திய நகரங்களில் ஒரு சாலை சந்திப்பில் கூடும் மக்கள் கூட்டம்  நம் நாடுகளில் ஒரு விழா காலத்தில் கூடுவது கூட அரிது. ஆகையால் நம் நாடு பாதுகாப்பு மாதிரி அங்கு எதிர் பார்க்க முடியாது."

"இந்தியாவில் பெரும்பான்மை மக்கள் சாதுவானவர்கள் தாம். கலாசாரத்தை பேணுபவர்கள் தான். பெண்களுக்கு தீங்கு விளைவிக்காதவர் தாம். "

"பல மதங்கள், பற் பல இனங்கள், வெவ்வேறு மொழிகள், மாறுபட்ட கலாச்சாரங்கள்,  எண்ணங்கள், நடை முறைகள் இவை எல்லாம் கடந்து ஒரு நாடாக அவர்கள் விளங்குவது பெரும் அதிசயம் .." என்றார்.

"மேலும் நான் பல முறை இந்தியா சென்று இருக்கிறேன்.  நானோ என் மனைவியோ ஒரு போதும் அங்கு பாதுகாப்பின்மையை உணர்ந்தது இல்லை. மாறாக திரும்பவும் போக வேண்டும் என்ற ஆசை தான் மேலோங்குகிறது. இந்தியாவின் ரயில் பயணங்களும், கடைகளும், உணவு வகைகளும், அந்த  மக்களின் அன்பும், இந்தியாவின் பண்டிகைகளும், வண்ணங்களும், மலர்களும் ..என்னால் மறக்க முடியாதவை ..நீங்கள் நேரில் போய் பார்த்தால் தான் உணர முடியும். அதனால் இந்த சம்பவத்தை கொண்டு ஒரு தப்பான முடிவுக்கு யாரும் வர வேண்டாம்". அப்பாடி தப்பித்தேன், என்று அவரை நன்றியுடன் பார்த்து விட்டு என் இருக்கைக்கு வந்து விட்டேன். 

அந்த பெண் இறந்த பின்னும் அந்த சம்பவத்தை பற்றியும், அவள் குடும்பத்தை பற்றியும் தொடர்ந்து செய்திகள் வெளி வந்த வண்ணம் இருந்தன. அதில் ஒரு செய்தி என் மனதை வெகுவாக பாதித்தது. வீதியில், உறையும் பனியில், இரவில் அந்த பெண் உடுப்புகள் இன்றி உயிருக்கு போராடியபடி கிடந்த போது, சுற்றி நின்று வேடிக்கை பார்த்தவர்களில்  ஒருவரும் உதவ முன் வரவில்லை என்று அந்த பெண்ணின் தோழன் சொல்லி இருந்த செய்திதான் அது. ச்சே ...என்ன மக்கள் இவர்கள் என்று நொந்து போனேன். இப்படி வெட்கமின்றி வேடிக்கை பார்த்து விட்டு பின்னர் எதற்கு போராடுகிறார்கள் என்று தோன்றியது. திடீரென்று மனதில் ஒரு விதமான பீதி குடி கொண்டது. என்ன ஆயிற்று நம் நாட்டிற்கு? எதை நோக்கி போகிறது? மனிதாபிமானம் செத்து விட்டதா? வாழ்க்கை அவ்வளவு இயந்திர தனமாக ஆகி விட்டதா? ஒன்றும் புரியவில்லை. நாம் ஊரை விட்டு  வந்த இந்த நாலைந்து  வருடங்களில் இவ்வளவா மோசமாகி விட்டது? நம்ப முடியவில்லை. சட்டம் ஒழுங்கு எல்லாம் மொத்தமாக சீர் குலைந்து விட்டதா?

இதற்கிடையில் திடீரென்று என் கண்களில் இனம் புரியாத ஒரு பாதிப்பு ஏற்பட்டது. கண்களுக்குள் திரை விழுந்தாற்போல் பார்வை தடுமாறியது. தலைவலியும் நின்ற பாடில்லை. தோஹாவில் இருக்கும் கண் மருத்துவரிடம் சென்ற போது, சென்னைக்கு போய் மருத்துவத்தை தொடர்வது நல்லது என்று அறிவுரைத்ததால் நானும் என் மகனும் ஊருக்கு அவசரமாக திரும்பினோம்.

எங்கள் வீடு காஞ்சிபுரத்தில் இருந்தது. தினமும் எழும்பூரில் உள்ள சங்கர நேத்ராலயாவிற்கு கண் சிகிச்சைக்காக போக வேண்டும். சரியாக காலை ஏழேகாலுக்கு தென்னக ரயில்வேயின் திருமால்பூர் விரைவு ரயில் வண்டி  காஞ்சிபுரம் புது ரயில் நிறுத்தம் வரும். அதில் போனால் எழும்பூரில் ஒன்பதரை மணிக்கு இறங்கலாம். மாலை சரியாக ஆறேகால்  மணிக்கு சென்னை கடற்கரையில் இருந்து திருமால்பூர் திரும்பும். இரவு எட்டறை  மணிக்கு வீடு திரும்பலாம். தினமும் போக வேண்டி இருந்ததால் நானும் என் கணவரும் ஒரு மாதத்திற்கான முதல் வகுப்பு சீட்டு வாங்கி கொண்டோம்.

அந்த விரைவு ரயில், அரசு பணியாளர்கள் சென்னையில் உள்ள தம் அலுவலகங்களுக்கு செல்வதற்கென்றே இயக்க படுகின்றது. என் கணவர் சென்னை துறை முகத்தில்  பணியாற்றிய போதும் அதில் போவது வழக்கம். நீதியரசர், அரசு மருத்துவர், காவல் துறை  கண்காணிப்பில் பணியாற்றுபவர், மத்திய எண்ணை துறையில் பணியாற்றுபவர், முதலமைச்சர் அலுவலகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர் என்று அதில் வழக்கமாக போகும் பலர் என் கணவருக்கு பரிச்சியமானவர்கள். காலையில் அந்த முதல் வகுப்பு பெட்டி ஒரே குதூகலமாக இருக்கும். பரஸ்பரம் வணக்கம் சொல்வதும், நலம் விசாரித்து கொள்வதும், தினசரிகள் , புத்தகங்கள் பரிமாறி கொள்வதும், காலை உணவு பகிர்ந்து உண்பதும், அரசியல் நிகழ்வுகளை அலசுவதுமாக களை  கட்டும்.  எல்லாருமே என்னிடத்தில் அன்பாக இருப்பார்கள். ஆனால் எல்லாரும் மகிழ்ச்ச்சியாக இருக்கும் போது என் மனதில் மட்டும் எதோ ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. மனச்சோர்வா அல்லது உடல் சோர்வா என்று புரியவில்லை.

இப்படியே பதினைந்து நாட்கள் கடந்தன. ஓரளவு கண் பார்வை சரியானாலும் மருத்துவமனைக்கு அடிக்கடி  போக வேண்டி இருந்தது. பொங்கல் கழிந்த பின் ஒரு நாள் காலை, வண்டி செங்கல்பட்டு சந்திப்பில் நின்று கொண்டு இருந்தது. பொதுவாக தினமும் அங்கே  பதினைந்து நிமிடங்கள் நிற்கும். மணியடித்து, ரயில் வண்டி நகர தொடங்கியது. அப்போது இரண்டு பெண்கள், ஒருவர் நடுத்தர வயது, மற்றொருவர்  நடுத்தர வயதை தாண்டியவர், ரயில் வண்டி கூடவே ஏற முயற்சி செய்தபடி ஓடி வந்தனர். இருவர் கையிலும்  கூடைகள் வேறு, ரொம்ப ஏழ்மையானவர்கள் என்று தோன்றியது. முதல் வகுப்பு பெட்டிக்கு அருகில் தான் பெண்களுக்கான சிறப்பு பெட்டி இருக்கும். அதில் ஏற தான் ஒடி வந்து கொண்டி இருந்தனர்.

வண்டி வேகம் எடுக்க தொடங்கி விட்டது. அவர்கள் ஏற முயற்சி செய்வதை விடவில்லை, பார்த்தால் விழுந்து இடையில் சிக்கி கொள்வார்கள் போல தெரிந்தது. ஜன்னலோரம்  இருந்த எனக்கு ரொம்பவே பதட்டம் ஆகி விட்டது. உடனே முதல் வகுப்பில் இருந்த ஆண்கள் பதறி போய் வாயில் பக்கம் ஓடினர். சட்டென்று அவர்கள் சுமைகளை வாங்கி கொண்டு, அவர்களை கரம் பற்றி இழுத்து எங்கள் பெட்டியில் ஏற்றி கொண்டனர். மரணத்தில் இருந்து மயிரிழையில் தப்பிய அதிர்ச்சியில் இரு பெண்மணிகளும் ரொம்ப படபடப்பில் இருந்தனர். பயத்தில் மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கி கொண்டிருந்தனர். அதில் ஒருவர் மயங்கும் தருவாயில் இருந்தார்.

சரிதான், இந்த பெண்களுக்கு கண்டபடி திட்டு விழபோகிறது என்று எதிர்பார்த்திருந்தேன். ஆனால் நடந்தது அதற்கு மாறானது. பட பட என்று எல்லாரும் ஆளாளுக்கு உதவி செய்தனர். இருவர் தம் இருக்கையை அவர்களுக்கு கொடுத்தனர். மற்றொருவர் குடிக்க தண்ணீர் கொடுத்தார். மூச்சு வாங்குவதை கவனித்த மருத்துவர் அவர்களை  விசாரித்தார்.   தன்  காலை உணவை எடுத்து இன்னொருவர் நீட்டினார். அந்த பெண்கள் இருவரும் இன்னும் பயத்தில் இருந்து மீளவில்லை போலும், சாப்பிட எதுவும் வேண்டாம் என்றனர்.

ஒருவாறு  அவர்கள் சுதாரித்து கொண்ட பின்னர்  நடந்தது தான் என்னை மிகவும் கவர்ந்தது. காவல் துறையில் பணி செய்பவரும், மருத்துவரும் சென்று அவர்கள் எதிர்புறம் உள்ள இருக்கையில் அமர்ந்து அவர்களிடம் நிதானமாக பேச ஆரம்பித்தனர். அந்த பெண்மணிகள் செய்தது எவ்வளவு அபாயகரமான செயல் என்று எடுத்து உரைத்தனர். வண்டியை தவற விடும் பயத்தில் உயிரை தவற விடும் செயலில் அவர்கள் ஈடு பட்டதை சுட்டி காட்டினர். அவர் தம் குடும்பத்தை நினைவூட்டினர். இனிமேல் ஒருபோதும் அந்த தவறை செய்ய கூடாது என்று கண்டித்தனர். ஒரு வண்டியை தவறவிட்டால் பொறுத்து இருந்து அடுத்த வண்டியில் வரவேண்டும் என்று அறிவு கூறினார். அந்த பெண்களும் "சரிங்க ஐயா, சரிங்க ஐயா, இனிமே சாக்கிரதையாக இருப்போம் " என்று தலை ஆட்டி கேட்டு கொண்டதை பார்த்து ஒரு வகையான மன திருப்தியை கொடுத்தது.  பின் தாம்பரத்தில் வண்டி நின்ற பின் அவர்கள் இருவரும் அடுத்து இருந்த பெண்கள் பெட்டியில் ஏறி கொண்டனர்.

அன்று இரவு மருத்துவமனையில் மிகவும் தாமதம் ஆனதால் எங்களால் ஆறேகால் விரைவு வண்டியை பிடிக்க முடியவில்லை. அதன் பின்னர் எட்டு மணிக்கு ஒரு சாதாரண வண்டி ஒன்று இருக்கும், அதையும் தவற விட்டு விட்டோம்.  அதன் பின் காஞ்சிபுரம்  செல்ல எங்களுக்கு நேரடியாக ரயில் வண்டி கிடையாது. பேருந்திலோ அல்லது காரிலோ சாலை வழியே போகலாம் என்றால் போரூர் அருகே வழக்கமாக இருக்கும் வாகன நெரிசலை நினைத்தாலே பயமாக  இருந்தது. அதற்கு பதில் செங்கல்பட்டு வரை ரயிலில் போய் அங்கிருந்து பேருந்தில் காஞ்சிபுரம் போகலாம் என்று முடிவு செய்தோம்.

அந்த ரயிலில் முதல் வகுப்பிற்கும் மகளிர் பெட்டிக்கும் பெரிதாக எந்த வித்தியாசமும் கிடையாது. அருகருகே தான் இருக்கும், இடையில் ஒரு பாதி தடுப்பு மட்டும் தான் இருக்கும். ரயில் செங்கல்பட்டை நெருங்கும் போது முதல் வகுப்பில் இருந்த எல்லோரும் இறங்கி விட்டிருந்தனர். நாங்கள் இருவர் மட்டும் தான் இருந்தோம். மகளிர் பெட்டி பக்கம் எட்டி பார்த்தேன் , இரு பெண்கள் மட்டுமே இருந்தனர். செங்கல்பட்டு வரும் போது இரவு மணி பதினொன்றரை தாண்டி  விட்டது . எனக்கு அந்த பெண்களை நினைத்து ரொம்ப கவலையாகி விட்டது. இருவரும் தோழிகளும் அல்ல போலும். தனி தனியே அமர்ந்து இருந்தனர்.

அது தான் கடைசி ரயில், கிட்ட தட்ட நடு நிசியாகி விட்டது,  ரயில் நிலையம் ஆள் அரவமற்று இருந்தது. படிக்கட்டு வழி இறங்கி வெளியே வந்தால் பேருந்து நிலையம் . அதுவோ இருண்டு இருந்தது. ஒரு பேருந்தும் இல்லை. ஆனால்  அந்த நேரத்திலும் தமிழக அரசு காவல் துறை  வேன் ஒன்று அங்கு நின்று கொண்டிருந்தது.  அதில் அதிகாரி ஒருவரும்  காவலர்  ஒருவரும் இருந்தனர். அந்த பெண்கள் இருவரையும் அவர்கள் எங்கே போக வேண்டும் என்று விசாரித்தனர்.  அந்த பெண்கள் கவலை பட்ட மாதிரி தெரியவில்லை. தங்களுக்கு பாதுகாப்பு தேவை இல்லை என்று சொல்லிவிட்டு அலட்டி கொள்ளாமல் நடந்து சென்று விட்டனர். அவர்களிடம் எந்த பயமோ பதட்டமோ இல்லாதது கண்டு வியப்பாக அதே நேரம் பெருமையாகவும் இருந்தது.

பின்னர் அந்த காவல் அதிகாரி எங்களிடம் வந்து விசாரித்தார். என் கணவர் நடந்ததை சொல்லி நாங்கள்  காஞ்சிபுரம் போக வேண்டும் என்றார். மேலும் கீழும் பார்த்து விட்டு, "உடம்பு சரியில்லாமல் இப்படிதான் இரவில் பிரயாணம் செய்ய வேண்டுமா? சென்னையில் தங்கிவிட்டு வரலாமே ...கடைசி பேருந்து போய் விட்டது, எப்படி போவீர்கள்?" என்றார்.  எங்களுக்கு கவலையாகி விட்டது, என்ன செய்வது என்று புரியவில்லை. ஏதேனும் டாக்ஸி வருகிறதா பார்ப்போம் என்று அவரே சொன்னார்.

அந்த பக்கம் டாக்ஸி ஒன்றும் வருவதாக தெரிய வில்லை.  காத்து கொண்டிருக்கும் பொதுவாக பேசி கொண்டிருந்தோம். அப்போது, அந்த அதிகாரி கடைசி ரயில் வரும் நேரத்தில் ரோந்து வருவது வழக்கம் என்றும், ஏதேனும் சந்தேகப்படும்படி தோன்றினால் கண்காணிப்போம், தேவை பட்டால் பாதுகாப்பும்  அளிப்போம் என்று சொன்னார். 

"எங்களால் முடிந்தவரை அசம்பாவிதம் நடக்காமல் பார்த்து கொள்வோம். ஊரின் ஒவ்வொரு மூலை  முடுக்கிலும் போய்  நாங்கள் பார்ப்பது என்பது  நடைமுறையில் இயலாது  ...மேலும் ஒவ்வொரு தனி மனிதருக்கும்  பொறுப்பு வேண்டும் அல்லவா..தவறு நடக்க வாய்ப்பு இருக்கலாம் என்று  தெரிந்தும் அந்த மாதிரி சந்தர்பங்களை உருவாக்குவதும், எதிர்கொள்வதும் முட்டாள் தனம்.." என்றார்.  

 எங்களுக்கு டாக்ஸி கிடைத்து நாங்கள் அதில் போகும் வரை  அவர்களும் எங்களோடு காத்து இருந்தனர். பின்னர் எங்கள் டாக்ஸியுடன் சிறிது தூரம் வந்த பிறகு அந்த காவல் வண்டி பிரிந்து சென்றது.

அந்த இரவில் காஞ்சிபுரம் நோக்கி பயணித்து கொண்டு இருக்கும் போது காலையில் நடந்ததையும், இப்போது இரவில் கண்டதையும் என் மனது அசை போட்டு கொண்டு வந்தது. அந்த இங்கிலாந்து தோழர் சொன்னது நினைவு வந்தது. என் நாட்டை பற்றி பட்டுபோய் இருந்த நம்பிக்கை மீண்டும் துளிர் விட்டது.

1 comment:

  1. உங்களுடைய இந்த இடுகை யினை இன்றைய வலைச்சரத்தில் http://blogintamil.blogspot.in/2015/07/thalir-suresh-day-6.html அடையாளம் காட்டியுள்ளேன். நேரமிருப்பின் சென்று பாருங்கள்!

    ReplyDelete